விதித்த சட்டங்கள் வாசலில் நிற்கட்டும்,
விலகி நின்றே வேடிக்கை பார்க்கட்டும்;
உடல்களின் உரையாடலில்
உதிரும் சொற்களற்ற அமைதி - அது
ஆயிரம் அறிவுரைகளை விடவும் மேலானது...!
நகங்களின் இடுக்குகளில்
சிக்கிக் கொண்ட உனது மேனியின் வாசமும்,
வியர்வையில் நனைந்து
உப்பாகிப்போன நம் முத்தங்களும்
எந்தப் புனித நூலிலும்
பதிவு செய்யப்படாத
உயிர்ப்புள்ள மறைபொருள்...
யாரோ சொன்ன இலக்கணங்களுக்காக
யார் யாரோ வாழ்ந்து கழியட்டும்;
காமத்தின் சூட்டினில்
நம் அகந்தைகள் கருகிச் சாம்பலாகி,
வெறும் உடலற்றுப் போன
வெட்டவெளியில் நாம் கரைவோம்...!
இருள் இன்னும் அடர்கிறது...
காற்று சுழன்று வீசுகிறது...
மழைக்காலத்துத் தவத்தின்
அடுத்த அத்தியாயத்தைத் துவங்கு...
சலிப்படைவதே
மீண்டும் சங்கமிப்பதற்கான
ஒரேயொரு இடைவேளைதான்...!
வா...!
நாளும் புதிதாய்ப் பிறக்கும்
இந்த அறம் சார்ந்த தீயை,
அணைந்திடாமல் அணைத்துக் கொள்வோம்...!
No comments:
Post a Comment