Wednesday, May 13, 2026

பாதையில் கண்ட பாவையொருத்தி...!

இடப்பக்கம் காட்டி வலப்பக்கம் கைநீட்டித்
திடப்பக்கம் நேரே செலுத்தும் - மடப்பாவாய்!
சாலையில் நீயும் தனிவழிச் செல்வதற்கோ
கோலங்கள் போடுகிறாய் கூர்ந்து.

விளக்கினில் ஒன்றைக் காட்டி விரலால்
துலக்கமாய் வேறொன்று காட்டி - நிலத்தினில்
நேராகச் செல்லும் நங்கையே! நின்னையார்
பாரில் அறிவார் பரிந்து?

இடப்புறம் மின்னும் வலப்புறம் காட்டும்
திடமுற நேரே திரியும் - மடக்கொடியே
சாவி கொடுத்தும் சகதிமேல் வண்டியினைத்
தேவிநீ ஓட்டுந் திறன்.

மழைபெய்ய முன்னிற்கும் மாமருந்துச் சாலை
பிழையென எண்ணிப் புறக்கணித்து - விழைவோடு
சோறுண்ணச் செல்லும் சுடர்க்கொடியே! நின்னறிவு
வேறுண்டோ வையத்து மேல்?

பெய்கின்ற மாரி பிணியைத் தந்திடுமே
கைகாட்டும் மருந்தகம் கைகூட - மெய்யுருக
உண்ணு முணவகம் ஓடும் மடவரலே!
நண்ணுமோ நோயுனக்கு நன்கு.

நனையாதே மாரியில் நைந்துளம் நோகும்
பிணியானால் பாழாகும் நெஞ்சம் - தணிவிலாச்
சோறுண்ணச் செல்லும் சுடர்க்கொடியே! முன்னிருக்கும்
ஆறு மருந்தகம் ஆய்.

மாரி நனைய மனந்துயரம் மிஞ்சுமால்
சீரிய தேகம் சிதைந்தக்கால் - ஆரிங்கு
ஆறுதல் சொல்வார்? அயலார் உணவகமே
தேறுதல் அன்றோ உனக்கு.

கடுகிச் செல்லாதே காலன் வருவான்
நடுங்கும் இருளில் நயந்து - முடுகியே
உன்னைநீ காப்பாய் உனைநம்பி இங்கொரு
தன்னிகரில் இல்லம் தழைக்கும்.

இருண்ட வழியில் இயக்கம் தவிர்நீ
மருண்டே மிகவேகம் கொள்ளேல் - அருண்டே
உனைநம்பி வாழுமே உற்றார் குடும்பம்
நினைவிற்கொள் நெஞ்சே நிலத்து.

வேகம் தவிர்நீ விழிப்பாய் இருளினில்
ஏகும் வழியி லெச்சரிக்கை - ஆகினால்
உன்னைநீ காப்பதே உற்ற குடும்பத்தின்
பொன்னான வாழ்வெனப் போற்று.

No comments:

Post a Comment