Saturday, May 16, 2026

உமிழ்நீர் சொரிந்தோடும் தமிழதிகாரம்...!

​முந்தை நிலத்தினில் மூத்தவளாய் என்றென்றும்
விந்தையுற்றே வாழும் விழுமியமாய் — முந்துதமிழ்
ஆதி மறைபொருளாய் ஆழ்கடலின் கீழ்த்தோன்றி
சோதி எனவொளிரும் சூழ்ந்து.

​உயிராய் உணர்வாய் உளத்தினில் நின்று
மெய்யாய் விளங்கும் மொழியே — நயமார்ந்த
ஓசை ஒலியமைப்பால் உள்ளத்தை ஈர்க்கின்ற
வாச மலர்த்தமிழே வாழ்த்து.

​கரைகாணாத் தொல்காப்பியக் கட்டமைப்புத் தந்து
திரைகடலாய் நின்ற திருவே — அரணாக
மாண்புறு நன்னூல் மரபினைக் காத்துநிற்கும்
யாப்பு இலக்கணமே யறி.

​முப்பால் உலகிற்கு நல்கிய மூலமே
செப்பரிய சீர்மிகு செம்மொழியே — செப்பமுடன்
நாலடி நானூறும் நல்லறத்தைப் போற்றுகின்ற
மேலையார் போற்றும் விளக்கு.

​நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூற்று
உற்ற பதிற்றுப்பத் தோடே — நற்றமிழின்
ஓங்கு பரிபாடல் கலித்தொகை யோடுநல்
ஆங்ககப் பாட்டே யறி.

​சிலம்பின் சிலம்பொலிச் சீர்மிகு காப்பியம்
நிலம்புகழும் மேகலையோடு — கலந்தே
இசைநாடகத் தொன்மையால் இன்பம் தருமே
திசைநாறும் தீந்தமிழே தேர்.

​மலையின் உதித்து மடுத்தோடும் யாறாய்
அலைகடலில் பாயும் அழகாய்த் — தலைசிறந்த
சந்தப் பொழிலமைத்துச் சாகா வரம்நெற்றே
விந்தையாய் நின்றாய் விரைந்து.

​ஓலைச் சுவடியிலிருந்து கணினிவரை
ஞாலப் பெருவெளியில் நல்வழியாய் — காலத்தை
வென்றே புதுமையாய் வீறுகொண்டு நிற்கின்ற
நின்றமிழே நின்கொடை நேர்.

​யாதும் ஊரென்றே உலகிற்குப் பறைசாற்றி
யாவரும் கேளிரென்றே எண்ணியே — தீதின்றி
மாந்தநேயப் பண்பை வளர்க்கின்ற மாமொழியாய்
பூந்தமிழே நீயே பொலி.

​எத்திசையும் புகழ்மணக்க வாழ்கின்ற எழில்தமிழே
நித்தமும் உன்பாதம் போற்றுகின்றேன் — வித்தகமாய்
என்னுயிராய் என்னுணர்வா யென்னாளும் காத்துநிற்கும்
நன்னெறியே உன்னை நயந்து!


No comments:

Post a Comment