Monday, May 11, 2026

விழி தேடும் வழி...!

பந்தக்கால் ஆட்டிற்குப் பாழ்இரவே ஈதென்று
விந்தைச் செய்திசொல்லார் வீணரே - அந்தோ
அறிவிக்க ஆளுமில்லை அஃதறியா தேதான்
மறித்துயரம் கொள்ளுதே மற்று.

ஆட்டின் நிலையறியா தன்பே!நீ காலத்தைத்
தாழ்த்தித் தவிப்பினைத் தந்திடாதே - ஏய்த்தே
வருத்திடின் என்னுயிர் வாடியே நீங்கும்
ஒருக்காலும் தாங்காது ஓர்ந்து.

உறக்கம் இழந்தே உளம்தளர்ந்தேன் அன்பே
மறக்க முடியா மனத்தால் - இறக்கின்ற
ஆட்டின் துயரம் அறிந்தும்நீ காலத்தைக்
கூட்டியே கொல்லாதே கூறு.

கடுகும் இடரின்றி காதலிப்பாய் அன்பே!
நெடுகும் பொழுது நிலைகுலையும் - வடிந்தே
உதிரும் மணலாய் உயிரும் உலர
விதிர்ப்பாய் விரைந்துநீ வா.

அறுக்கும் கத்தியை ஆடுஅறி யாது
பொறுக்கும் மரணப் பொழுதை - மறுக்காமல்
மெல்லக் கொல்வாய்நீ மெளனத் தாமதத்தால்
சொல்லக் குறையுமோ சாவே.

தாங்கும் வலிமை தளர்ந்ததே என்னுயிர்
ஏங்கும் உனக்காக எந்நாளும் - தூங்கும்
விழியும் உனைக்காண வேண்டித் தவிக்கும்
வழியும் உணர்வாய் விரைந்து.

பேசும் மொழியின்றிப் பேதலித்தேன் அன்பேநீ
வீசும் மௌனம் வினையாகும் - பாசத்தால்
பந்தக்கால் ஆடு பதைப்பதைப் போலவே
சிந்தை சிதைந்தேன் தெளி.

ஓடும் பொழுதும் உதிரும் உயிரும்நின்
வாடும் நினைவால் வதைக்குதே - கூடுமே
காலத் தாமதம் நமக்குள் கசப்பினை
ஞாலமே போற்ற நயந்து.

மறிக்கு விதியென்றால் மாளுமே நாளை
நெறிக்கு உனைவேண்டினேன் நேர்மை - குறித்துநீ
வாரா திருப்பின் வதைபடும் என்னுயிர்
தீராத் துயரம் தெளி.

கட்டிய ஆடு கதறல் அறிவாயோ?
வெட்டி வீழ்த்தும்முன் ஓடிவா - கொட்டிடுமே
என்னுயிர் இன்னும்நீ தாமதம் செய்திடின்
நின்னுயிர் நானும் நயந்து.

No comments:

Post a Comment