எண்பத் தொருமுறை ஈந்த குருதியினைப்
பண்பாய் மனிதர்க்கே பார்த்தளித்தேன் - திண்பாவாய்
இன்னுமொரு கோடலை என்னிடமே கேட்குதோ
முன்னிற்கும் இச்சிறு புள்!
வண்டமிழில் பாடும் வள்ளலென என்னைஎண்ணி
அண்டையில் வந்து அமர்ந்ததே - சண்டைக்
கொசுவிதுவோ செங்குருதி கேட்கும் நிலைக்கே
வசையிலாச் சேமக் கலம்!
எத்தனையோ பேர்க்கு இயைந்து கொடுத்ததனைச்
சுவடியினில் இட்டே புதுக்கினேன் - இக்கொசுவோ
அத்தனையும் தாண்டி அடிக்கடிக் குத்துவதால்
எத்தனையோ ஈகை இது!
தாகம் தணித்திடவே கொடையாய் என்உடலை
ஏகமாய் நாடி இரைதேடும் - வேகம்
அடங்காத இக்கொசுவுக்கு அன்பாய் அளிக்கும்
கொடையை கணக்கிடல் அரிது!
ஊசியிலை கூர்முனையால் உத்தமர்கள் வாங்கியே
காசின்றிச் சேமக் கலத்திட்டாரே - வீசிவரும்
இக்கொசுவோ ஊசியின்றி என்னுடலில் குத்துவதால்
எக்காலமும் ஈகை இது!
வாரி வழங்கும் வள்ளலென என்னைஅறிந்து
ஊரை விடுத்துவந்திங்கு உற்றதே - சீரியதாய்
எண்பத்தொன் றோடு இருநூறு கொடையாய்
உண்பதற்குத் தந்ததுவே உற்று!
ஏட்டில் கணக்கெழுதி எண்பத்தொன் றென்றிருந்தேன்
பாட்டினில் சேர்க்கும் பான்மையாய் - நாட்டினில்இக்
கள்ளக் கொசுவிற்குத் தந்தநற் கொடையை
உள்ளப் படியே அறியேன்!
உரிமை உடையவன்போல் ஓடிவந்து குத்திப்
பெருமையாய் வெங்குருதி பருகுமே - இருமையிலும்
கொடைத் தலைவனாய் என்னை நினைத்துமிந்தத்
தோகைக்கொசு செய்யும் துணிவு!
எல்லாரும் போற்ற எழிலார் குருதியினைப்
பல்லோர்க்கும் தந்து பயின்றேனே - நில்லாது
இரவினில் இந்நுண் கொசுவிற்கே ஈந்த
வரவெல்லாம் ஏட்டில் இலை!
மண்ணில் மனிதர்க்கு மாண்பாய் எண்பத்தொன்று
விண்ணில் பறக்கும் இக்கொசுவோ - எண்ணில்லாக்
காலங்கள் குத்திக் குடித்த குருதியினால்
ஞாலமே போற்றும் கொடை!
No comments:
Post a Comment