வண்ண முகமூடி மாந்தரையே ஆட்டுகின்ற
திண்ணமுறுக் கோமாளி சித்தத்தில் — நண்ணியதோர்
காரிகையாள் மையல் கசிந்துருகி நெஞ்சினுள்ளே
பேரன்பு பொங்கிற்றே பின்ந்து.
கண்ணாளன் நெஞ்சத்தில் காரிகையைச் சேர்ப்பதற்கு
எண்ணியே ஏங்கி யிளைத்தானே — மண்ணில்
கரம்பிடிக்க வாராயோ காதலியே என்று
பரம்பொருளை வேண்டி நைந்து.
பொய்யான வேடம் விடுத்துப் புகழரசி
மெய்யாக உன்னை விரும்பினேன் — வையத்தில்
உன்வடிவே எந்தன் உயிராகும் என்றுரைத்தான்
தன்பரிவைத் தந்து தகைந்து.
மொழியைச் செவிமடுத்து மோகனப் பெண்ணும்
விழியால் இதயம் விடுத்தாள் — பழியுலகில்
ஈர்ப்புற்றுக் காதலன் இன்முகத்தைக் கண்டவளும்
சார்புற்று நின்றாள் தழைத்து.
மங்கலமாய் உற்றார் மகிழ்ந்துரைக்கக் கோமாளி
நங்கையவள் செங்கமலம் போன்றகரம் — தங்கியே
காப்புநாண் பூட்டித் தலைவனாய் நின்றானே
மூப்புயிரும் காக்கும் முறை.
ஆயிரந்தான் வேடமிட்டு ஆடியுயிர் வாடினாலும்
தூயவளின் மார்பில் துயில்கொண்டான் — ஆயிழையாள்
கட்டி அணைத்துக் களிப்பொழியக் காமத்தீ
தொட்டுத்தீர்த்தாள் இன்பச் சுடர்.
வகைவகையாய்க் காதல் வழிவழியாக் கொண்டு
பகைமறந்து வாழ்ந்தார் பல்லாண்டு — அகமகிழ்ந்து
ஆணும்இந் நங்கையும் ஆலித்தே இன்பமுற்று
நாணுயிராய்க் கூடி நயந்து.
இவர்தம் பெருங்காதல் இன்பத்தைக் கண்டு
அவமதியாய் வையத்தார் நோக்கி — எவரும்
பொறாமை யெரியால் புலம்பி யிழிந்தார்
உறவினைக் கண்டு உவந்து.
ஆணோடு பெண்ணும் அறநெறியில் காமத்தைச்
சேணோடு கூடிச் சுவைத்தாரே — நாணமிலா
மன்பதையே உற்றுப்பார் மானக் குலக்கோமாளி
அன்பின் வடிவம் அறி.
வேடப் பொய்நீக்கி வென்றாரே காதலினால்
ஆடவலும் பெண்ணும் அகமகிழ்ந்து — பீடுயர்ந்த
கோமாளி தம்பதியர் கொண்டவன்புக் கிவ்வுலகில்
ஈடில்லை என்றே இயம்பு.
No comments:
Post a Comment