Monday, May 18, 2026

கதைக்கதையாம் காரணமாம்...!

பெண் :

​அள்ளியே மல்லிகை அங்கை நிறைந்தவள்
வெள்ளியைக் காசாய் விரைந்தீய்ந்தே — ஒள்ளிய
பூக்காரி தன்னிடத்துப் பூவாங்கி நின்றாளே
நோக்கினாள் அன்பன் முகம்.

​ஆண்  :

​தென்றல்  திசையெங்கும் மல்லிகையின்
மென்றூய வாசமே மேவுதே — நன்றேநின்
ஓதி நிறைந்த உயர்மணமே என்றெண்ணி
ஏதினேன் உன்பால் விரைந்து.

​பெண் :

​அன்றுநீ பூக்காரி அங்கை மலர்களையே
கண்டும் எனைக்கண்டும் காணாமல் — ஏனோதான்
ஏய்த்து நகர்ந்தாய் எனைவாட வைத்தீங்கு
தேய்த்தாய் என துளம்.

​ஆண் :

​சுற்றத்தின் சூழல் சுமையாய் அழுத்தவே
உற்ற உனைப்பார்த்தும் ஓடினேன் — நற்றவமே
நெஞ்சம் கனத்ததால் நேரிழையே பூவாங்கக்
கஞ்சனாய் நின்றேன் கலந்து.

​பெண் : 

​வாங்கிய பூவை வலக்கையால் நீயெடுத்துப்
பாங்காய்க் குழலில் புனைந்திடுவாய் — ஏங்கிடும்
அந்திப் பொழுதின் அலைவரிசை நாணமதை
முந்துதே நெஞ்சில் முடுகி.

​ ஆண் :

​மென்கூந்தல் தன்னுள் விரல்தொடவே மெய்மறந்து
மல்லிகையை யானும் முடிக்கையிலே — அல்குல்
துகிலொதுங்கத் தொட்டுச் சிலிர்த்தாள்என்காதல்
மகிழ்வொடு நெஞ்சம் மடுத்து.

​பெண் :

​பூவின் மணமும் புகுந்தவுன் மூச்சுமெனை
ஆவி யிழுத்தே யாளுகின்ற — மேவியுன்
மார்பினில் சாய்ந்தே மயங்கிடவே என்னுள்ளம்
ஈர்ப்பு மிகுதே இனிது.

​ஆண்  :

​மையல் கொண்டேநின் மலர்முகத்தைக் காண்கையிலே
ஐயமிலா இன்பம் அலைமோதுதே — தையலே
மல்லிகைப் பூவின் மணத்தினும் உன்னுடலின்
நல்லியல்பே ஈர்க்கும் நயந்து.
பெண் : 

​ஆடை நெகிழும் அணைப்பினிலே ஆர்வம்மிகக்
கூடல் தவிப்பைக் கொடுத்தாயே — நாடிழந்து
மன்மதனின் லீலைக்குள் நாமும் மடிந்திடவே
புன்னகைத்தாய் இன்பம் புகுந்து.

​ஆண் : 

​இதழோடு இதழொட்டி இன்பக் கடலில்
மிதந்தேநாம் ஒன்றாய் மிகவே — புதுமலராய்
அங்கம் கலந்தே அகமகிழக் காமமது
பொங்குதே காதல் புரிந்து.

No comments:

Post a Comment