மையிருட்டு மேனி மதியொளிக்கும் மேலாகக்
கையிருட்டுக் கண்ணால் கவர்தாளே - மெய்யெழிலைக்
கண்டேன் கனவில் கசிந்தே உருகினேன்
கொண்டேன் உயிரில் குறித்து.
உள்ளத் துணையாகி உத்தமியாய் நின்றென்னை
மெள்ளத் தழுவி மிளிர்ந்தவள் - தெள்ளமுதாய்
கற்பின் நெறியால் கனிந்தே உயிரினில்
நிற்பாள் நிழலாய் நயந்து.
ஊடல் தணிந்தே உவகையுற ஒட்டியே
கூடல் கொடுத்த குலக்கொடி - தேடல்
முடிந்தே முடிந்த முழுமையின் இன்பம்
படிந்ததே பாலில் பழம்.
நிழலாய்த் தொடர்ந்தே நிலைகுலையச் செய்தாள்
அழகாய்ப் படர்ந்தேன் அவள்பால் - விழியோரம்
நாணம் ததும்ப நயந்துருகி நின்றேநாம்
காணக் கனிந்தது காதல்.
பின்னே அவள்தொடரப் பேரின்பம் பொங்கிடவே
முன்னே படர்ந்தே முயங்கினேன் - நன்னெறியால்
ஒன்றி உடல்கள் உருகியே நின்றதால்
வென்றிடுமே இன்பம் விரைந்து.
அவள்தொடரும் பாதையெல்லாம் அன்பால் படர
இவள்தொடப் பூத்ததே இன்பம் - புவியினில்
வேறேது மில்லை விதியென்றே ஒட்டியே
தேறினோம் காதல் தெளிந்து.
செல்லச் சினங்கொண்டு சேயிழையாள் ஊடிடவே
மெல்லப் படர்ந்தே மிகுகாதல் - சொல்லி
மறுகால் முயங்கி மனமுருகி நின்றே
உறுகால் உவகை உற்று.
ஊடல் தணிந்தே உவகையுற ஒட்டியே
கூடல் கொடுத்த குலக்கொடி - தேடல்
முடிந்தும் முடியாது மீண்டும் தொடங்க
படிந்ததே இன்பம் பரிந்து.
ஊடலும் கூடலும் ஒன்றன்பின் ஒன்றாக
வாடாமல் வந்தே வளைத்திடும் - கூடலில்
தோற்றுத் திளைக்கத் தொடருமே காதலெனும்
ஆற்றில் அலைகள் அடுத்து.
காதல் பெருகிக் கதிர்நீட்டித் தீராமல்
காமக் கடலினில் கால்பதிய - மோகம்
தொடரத் தொடரத் துணையாகி நின்றே
அடரப் படர்ந்ததே அன்பு.
No comments:
Post a Comment