மெல்லத் தழுவ விழைந்தே உயிர்புனைய
அல்லல் அகன்று அணைந்துருக – சொல்லால்
அளவிடாக் காத லதிர்வுகள் கூடி
விளைந்தது வேட்கை வியல்.
கண்ணின் விழிநூறு காதல் கவிபாட
உண்ணாத வேட்கை உயிர்கூற – எண்ணி
அலைபாய்ந்து நெஞ்சம் அகமகிழ்ந் தேயே
மலைபோல் நின்றாள் மயில்.
ஆசை அரும்பியதே அன்பின் கரந்தீண்டி
வீசும் மணம்வீசி மேவுகையில் – நேச
உணர்வென்னும் வெள்ளம் உருகிப் பெருக
நினைவெல்லாம் நீயே நிறை.
தத்தித் தவழும் தளிர்மேனி தாங்கவே
முத்தத் துளிசிந்த மொய்க்குமெழில் – பித்தாய்
மனங்கலந் தப்பால் மலர்கின்ற காமம்
கனங்கொள் கவினாய்க் கனி.
நெஞ்சம் துடிக்க நிமிர்ந்த விழியிரண்டும்
மிஞ்சுமோ ராசையினை மெய்ப்பிக்க – கொஞ்சும்
குரலோடு கைகள் குழைந்துதழு வும்நாளும்
அரவணைத் தாள்பார் தவம்.
தீயாய் உடலும் சிறுவிரல் தீண்டவே
வாயால் உரைக்க வகைதேடி – சாயும்
அணங்கின் இதழில் அமுதூறக் கண்டேன்
வணங்கிக் கிடந்தேன் வரம்.
மெய்யோ டொடுங்கி வியர்த்திட்ட வேளையில்
பொய்யோவென் றெண்ணும் பொழுதேழும் – மையல்
கொண்டுனைச் சுற்றும் குளிர்ந்திடும் பார்வையில்
தண்டுலத் தாகித் தகி.
பூவினும் மென்மை பொழிந்திட்ட கூந்தலாய்
நோவின்றிச் சேர்ந்து நுணுக்கமாய் – ஆவி
கலந்தே களிக்கின்ற காதலின் பாங்கு
நலந்தரும் நன்மைக் கதி.
இரைதேடும் பசியாய் இதயங்கள் ஒன்ற
குரைதீர்த்த காமக் குளுமையாய் – கரைமீறி
பொங்கும் உணர்வின் புதுவெள்ளம் நீந்த
மங்கையர் ஆசையின் மாயம்.
நிலைபெறு நல்வினை நீங்காது நின்றால்
அலைபுனல் போலே அகமகிழ – கலைகளும்
கூடித் துய்த்திடக் கொண்டாடும் இவ்வுடல்
வாடிடும் காதலின் வளம்.
No comments:
Post a Comment