Tuesday, May 19, 2026

ஆரணங்கே அவளாக...!

காரார் குழலாள் கனிவாய் மொழியினிலே
சீரார் மனமும் திகைத்துமே – பேரொளியாய்த்
திங்கள் ஒளிரும் திருவா முகத்தினைக்
கங்குல் பொழுதிலும் காண்பேனோ? – மங்காத
வண்ணக் கனவாள் வளையல் குலுங்கிடவே
எண்ணக் கடலில் எனைத்தள்ளிக் – கண்ணாரத்
தேனார் மொழியால் தெவிட்டா உறவளித்து
வானா கதி தந்து வாழ்த்திடவே – ஆனாத
வெவ்வெரி வாடையாய் வீசும் தனிமையினில்
அவ்வரி வண்டாய் அலைந்துருகி – நெஞ்சாரக்
கள்ளமில் காதலைக் காத்துமே இன்புற்றாள்
உள்ளத்தின் உள்ளே உறைந்திருக்கும் பேரன்பே
தெள்ளமு தாகத் திகழ்ந்து.

No comments:

Post a Comment