Thursday, May 14, 2026

தந்தையின் நினைவலைகள்...!

உடல்நலிவு உற்றதென உற்றார் உரைக்க
உடனேயே ஊர்நோக்கி ஓடி - அடடா
வழிநடுவே அஞ்சினேன் வாராது நின்றார்
கடைமூச்சும் போயதே காண்.

முற்றத்தை ஓடி முதலவன் அடைந்திடவே
முற்றுபெற்ற தப்பயணம் முன்னமே - அற்றாராய்
தந்தை முகம்காணத் தவித்தே இளையவனும்
சிந்தையில் நைந்தான் திகைத்து.
படைநடுங்க நின்ற இடையவன் இன்று
தடைமீறித் தான்உடைந்தான் தந்தை - மடிமீது
தலைசாய்த்துத் தாளாது தந்தையைத் தேடி
நிலைசாய்த்து நின்றான் நிலத்து.
நயம்பட வாழ்ந்து நயத்தக்க உழைப்பால்
உயர்ந்துநின்று ஊரார் வியக்க - நயமுடனே
கண்ணியமாய் வாழ்ந்த கணக்கிலா நாட்களை
எண்ணியே ஏங்கும் மனம்.
பிழையான வாழ்விற் பிறழ்ந்தே அலைந்த
இளையவன் நான்இங்கு ஏங்க - தளையவிழ்ந்தே
என்னைநீ காண இயலாமல் போனதுவோ
மண்ணில்நீ மறைந்த மாயம்.
வெண்தாடிக் காரர் விதைத்த பகுத்தறிவை
தன்னுட் புகுத்தித் தரணியில் - நன்முறையில்
ஏடல்லா தொற்றுநோய் இன்பமாய் ஏற்றுநீ
நாடெல்லாம் சுற்றியதே நன்று.
பள்ளிக்காலப் பாலகனாய்ப் பாராமல்
அள்ளி இறைத்த அறிவுரை - தெள்ளுதமிழ்
ஆயிரம் ஆயிரம் ஆன்ற மொழிகளெல்லாம்
ஓயாமல் நெஞ்சில் உறும்.
காலணி காணாக் கழனி உழைப்பாலே
காலாவதி யானாயோ காற்றிடை - சாலவே
மண்ணோடு கலந்த மாண்புடைய பாதங்கள்
விண்ணோடு சென்றதோ விண்டு.
எத்தனை முறைஅழைத்தும் எழும்பிட மாட்டார்
மெத்த வருத்தம் விளைவித்தே - அத்தன்
எமக்கு அளித்த பெருந்துயர் எங்ஙனம்
சுமக்குவோம் யாம்இனிச் சூழ்ந்து.

இல்லாத தெய்வத்தை எண்ணித் தொழாதவர்
பொல்லாத பாரில் புகழ்பெற்றார் - நலிந்தே
தவிக்கின்ற எமக்குத் தகப்பன்நீ இன்றி
தருவார்யார் ஆறுதல் தான்!

ஒன்பதாண்டு ஓடி மறைந்தும் ஒருகணமும்
அன்பார்ந்த தந்தை அகலவில்லை - இன்பமாய்
எம்முயிரில் தங்கி இருப்பாரே என்றென்றும்
தம்முயிரைத் தான்ஈந்த தந்தை.
பிரிவென்னும் பேரலை பின்னித் துரத்த
நெறிநின்று நானுமே நின்றேன் - அறிவுரை
தந்தவர் இல்லாத் தனிமையிந் நாட்களெல்லாம்
சிந்தையில் தீயாய்ச் சுடும்.
தந்தை வழியில் தளர்வின்றி யான்நடக்க
சிந்தை தெளிந்தேன் சிறப்படைய - விந்தையாய்
ஆண்டுகள் போயினும் ஆறாதே அத்தனின்
ஈண்டுயிர்ப் பிரிவுத் துயர்.
காலக் கணக்கில் கரைந்திட்ட போதிலும்
கோலத் தந்தையின் கொள்கைதடம் - ஞாலத்தே
பிள்ளையாய் யான்நின்று போற்றுவேன் என்றென்றும்
உள்ளத்தில் வாழு முயிர்.

காலம் கடந்தும் கருத்தினில் நீங்காமல்
ஞாலத்தே என்னுடன் நண்ணுவீர் - சீலமுற
என்னுயிரின் ஊற்றாய் எழில்தந்தை நின்றென்றும்
நினைவலையாய்த் தொடர்ந்திருப்பீர் நீது!

No comments:

Post a Comment