Saturday, May 16, 2026

கொல்லும் காதலேந்தும் கொடியிடை நடையாள்...!

காரிருள் போன்ற குழலழகி தன்வண்ணச்
சீரழகால் என்னெஞ்சைச் சிந்திக்கச் - செய்தாளே!
பேரன்பு கொண்ட பெருந்தகையாய் நானிருக்க
ஆரமுதை நெஞ்சே அணை.

​அம்புலி இல்லா அமாவாசை நள்ளிரவில்
வம்பவிழ் கூந்தல் மறைத்ததென் - நெஞ்சத்தை!
கண்ணாளன் வாரானோ காரிருள் வேளையிலே
விண்ணாளும் காதலில் வீழ்ந்து.

​பேராசை கொண்டேன் பெருங்குழலாள் தன்மார்பில்
ஆரா அமுதைத் தினம்அருகே - ஈராயிரம்
நாட்கள் பருகினும் நாட்டம் தணியாதே
கோடி யுகமும் குறைந்து.

​நெஞ்சக் கமலத்தில் நேசமாய் வீற்றிருந்தும்
கொஞ்சும் மொழியாளோ ஊடினாள்! - வஞ்சியவள்
சின்னச் சிரிப்பொன்றில் சிந்தை குளிர்ந்திடுமே
என்னைவிட் டேகாதே ஈங்கு.

​ஊடல் தணிந்துநாம் ஒன்றுசேர் நல்வேளை
கூடல் பெருங்களிப்பில் கொள்ளுமால் - ஆடவன்றன்
தோளோடு தோள்சேரத் தோன்றிடுமே பேரின்பம்
வாடாத காதலின் மாண்பு

​மையல் பெருகி மனத்தில் எழும்நெருப்பு
வெய்ய சுடராய் விறகின்றி - மெய்யுருகக்
காமத் தழலாய் கனிந்தே எரிகிறதே
யாமத்து வேளையிலே ஈங்கு.

​நெருங்கிநாம் நிற்கையிலே நெஞ்சத்து மூச்சுப்
பெருங்காற்றாய்ப் பட்டுப் பதைக்க - இருவருமே
மெய்ம்மறந்து நின்றோம் மிகுகாம வெம்மையிலே
நெய்ம்மலர்ந்த பூப்போல நாம்.

​கார்வண்ணக் கூந்தல் கலைந்து புரண்டிடவே
சீரண்ணல் மார்பில் திளைத்தவளாய் - நேரங்கள்
போனதே அறியாமல் பூவொடு வண்டாக
ஆனதே நம்முடலின் அச்சு.

​மோகத்தீ மூச்சுடன் முட்டி இணைந்துநாம்
ஏகமாய் நின்ற இடத்தினில் - சோகங்கள்
தீர்ந்துயிர்கள் ஒன்றாய்த் திளைத்துமகிழ் வுற்றதே
பேரின்ப மோட்சப் பெருக்கு.

​அமாவாசை இருளும் அழகியவள் கூந்தல்
நமைச்சூழ்ந்து மோட்சம் நவில - எமதாகக்
காமமும் காதலும் கட்டவிழ்ந்து நின்றதே
பூமிப் பேராசைப் பொருள்!

No comments:

Post a Comment