Monday, May 25, 2026
விழியழகே விதிமுரணாய்...!
மெய்மொழித் தேடல்...!
நிழல்வழி பூத்த நித்திலமே...!
காதலில் தோயும் கனவுகள்...!
Sunday, May 24, 2026
அகவைக்கேற்ப அரசியல்...!
விளக்கு அணைந்த வீடு...!
திறக்கப்படாத சிறை...!
கசடறக் கற்க!, காதலையும்.. !
வற்புறுத்தி வாதம் செய்...!, கற்புடுத்திக் காதல் செய்...!!
கொலைவாள் தொலைத்தவர்கள்...!
தெருவெல்லாம் தேவதைகள்...!
Tuesday, May 19, 2026
சில வெண்பாப் புதிர்கள்...!
காதலிசம்...!
ஆரணங்கே அவளாக...!
பாலை நிலம் சோலை வனமானால்...!
காய்ந்த மணற்பாலை கார்ப்பெயலால் தண்குளிரும்
ஆய்ந்தவன்பு நெஞ்சத் தகம்.
வெம்மைப் பெருபாலை வீசுகுளிர் சோலையாம்
செம்மை இதயத் தவர்க்கு.
சுட்டெரிக்கும் பாலைச் சுடுமணலும் சோலையாம்
நட்ட இதயத்து நட்பு.
பாறை மணற்பாலை பாய்மழையால் சோலையாம்
ஈர இதயத்து இயல்பு.
கானல் மணற்பாலை காரொளியால் சோலையாம்
மானதத்தின் நல்லன்பு மன்.
வாட்டும் சுடுபாலை வண்மழையால் சோலையாம்
ஊட்டும் இதயத்து அன்பு.
பட்ட மரப்பாலை பாய்மழையால் சோலையாம்
தொட்ட இதயத்துத் தூய்து.
அற்ற வறள்பாலை ஆய்பொழில் சோலையாம்
நற்றயவு நெஞ்சத்து நாடு.
வற்றாத வன்பால் வறண்ட நிலப்பாலை
உற்ற இதயத்தால் வான்.
காடு வறண்ட கடும்பாலையும் சோலையாம்
நீடு இதயத்து நேர்.
ஓவியத்திற்கு ஒப்பனையாய் அவளும்!, காவியத்திற்கு கற்பனையாய் நானும்...!
வண்ண முகம்மறைத்து வாடுகின்ற பாவையவள்
எண்ணமதில் ஏக்கம் ஒளிந்திருக்குக் - கண்ணாடியில்
தன்முகத்தைக் காணத் தவிப்பாள் தனிமையிலே
புன்முகமூ டிபூட்டி இன்று.
மைதீட்டும் கண்ணிணை மாசற்ற புன்னகையும்
பொய்தீட்டி நிற்குமொரு பூவையவள் - நெஞ்சத்தில்
பெய்தீட்டும் கண்ணீரைப் பேதையவள் தான்மறைக்க
மைதீட்டி நின்றாள் மகிழ்ந்து.
சாயத்தைப் பூசியே தன்வழியே தான்நடக்கும்
மாயப்பொற் பாவை மனத்தினுள் - தீயாய்
அழுகின்ற ஏகத்தை ஊரறியா வண்ணம்
ஒழுகுவாள் சாயத்தால் உற்று.
கோலங்கள் நாளும் முகத்தில் வனைந்துகொள்ளும்
சீலமில்லா வையத்துச் செய்திதுவே - ஞாலத்தார்
மெச்சும் புறவடிவம் மேவியே ஏமாற்றும்
பொய்ச்சுவராய்ப் பாவை புனைந்து.
வண்ணங்கள் யாவும் நள்ளிரவில் தான்அழித்து
திண்ணமாய் நிற்பாள் திகைத்துமே - கண்ணாடியில்
உண்மை முகமதனை உற்றுநோக்கிப் பாவையவள்
கண்ணீர் வடித்தாள் கசிந்து.
புன்னகையைத் தேடிப் புதுவண்ணம் பூசுகின்றாள்
தின்னும் கவலையைத் தீர்க்கவே - மன்னுலகில்
ஊரார் புகழும் ஒளிர்கின்ற மேக்கப்பின்
சீரழிந்து நிற்குமே நெஞ்சு.
கவசமாய் வண்ணக் கலவைகளை நாளும்
அவயவத்தில் பூசி அவளுலா - வந்துமே
நெஞ்சத்து மென்மையை நேரே மறைப்பதற்கே
அஞ்சாமல் நிற்கின்றாள் ஆங்கு.
பொய்வடிவம் கொண்டு புறத்தார்க்குத் தோன்றிடினும்
மெய்வடிவம் தன்னை மிகமறைத்தாள் - கைவடிவக்
கண்ணாடியில் காண்பதுதான் உண்மை முகமென்று
எண்ணாமல் ஏமாறு வாள்.
காயங்கள் நெஞ்சில் கனன்று கதறிடினும்
மாயப் பொடியால் மறைக்கின்றாள் - நேயமிலா
ஊரார் அறியா உடற்கலையே மேக்கப்பெனப்
பேரார வாரம் புரிவாள்.
ஆசையற்று நெஞ்சில் அமைதியின்றி நாளுமே
பூசுகின்றாள் வண்ணப் பொடியதனை - வையகத்தார்
போலி முகத்தை ரசித்திடவே தன்னுயிரை
நாளும் வதைப்பாள் நலிந்து.
ன
Monday, May 18, 2026
கதைக்கதையாம் காரணமாம்...!
ஊடலும் கூடலும் தேடலின் நிமித்தம்...!
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்...!
குருதிக்கொடை கேட்கும் கொசு...!
தேடிய வாழ்க்கையே வேடிக்கை பார்க்குங்கால்...!
எண்ணுமிலை பேச எழிற்படமு மில்லைநீ
நண்ணுவதற் கருகில் நற்பொருளு மில்லைதான்! - மண்ணில்
மறந்தாரை மீண்டும் நினைப்பாரே; நெஞ்சில்
சிறந்தாரை யாங்ஙனம் யான்?
யானுனை நெஞ்சத் திருத்தியே வாழ்கின்றேன்!
தேனுலாஞ் சொல்லாய் திகழ்கின்றாய் - வானத்து
மீனைப் பழிக்கும் விழியினாய்; நின்நினைவை
யானொழிக்க மாட்டா திங்கு.
இங்குன் நினைவே இதயமாகி நின்றதால்
எங்குமே நீயாய் இருக்கின்றாய்! - தங்குமோர்
சின்ன நினைவுப் பொருளுமிலைக் காதலுக்குச்
சொன்ன குறிகாட்டும் சூது.
சூதொன்று மின்றியே தூயவளுன் பேரன்பு
காதொளிரும் பூணாய் கலந்ததே! - போதொளிரும்
கூந்தலாள் நின்னைக் குறியாகக் கொண்டென்றும்
ஏந்துவேன் நெஞ்சில் இவண்.
இவணென் னுயிராய் இருக்கின்றாய் நீயே!
எவராலும் நின்னையென் நெஞ்சில் - எவரும்
பிரிக்கவொணா வண்ணம் பிணைத்தேன்; பிரிந்தோர்
தரிக்காரே காதலின் தண்.
தண்கொண்ட மாமதிபோல் தண்மழையாய்ப் பெய்கின்றாய்!
கண்கண்ட தேவதையே காதலி நீ! - எண்கொண்ட
பேச்சில்லை, பார்க்கப் படமில்லை, ஆயினும்
மூச்சில்லை நீயின்றி மொய்ம்பு.
மொய்ம்புகொள் காதலால் மொய்த்தவென் நெஞ்சமிது!
மெய்யுருகி நின்னையே வேண்டினதே! - வையத்து
மற்றாரை யெல்லாம் மறக்கலாம்; நின்னையென்
சுற்றமாய் ஏற்றபின் சூழ்ந்து.
சூழ்ந்துன் நினைவே சுடராகி நின்றெரியச்
சூழ்ந்தவிந்தக் காரிருளும் தோற்குமே! - தாழ்ந்தே
உருகும் மெழுகாய் உடலடி; நின்றன்
வருகையையே நோக்கும் மனம்.
மனத்தினுள் வாழும் மயிலனையாய் நின்னைக்
கனவிலும் யானே கருதி - நினைவழியாத்
தன்மையால் பெற்றேன் தகவோடு; நின்னையான்
புன்மையால் போக்கல் புரை.
புரைதீர் குணத்தவளே பொன்னேநீ என்றும்
அரைநொடியும் நீங்கா தருளாய்! - உரைசெய்
படமுமில்லை பேசவும் எண்ணுமிலை; நெஞ்சில்
இடமுண்டு வாழா தியம்பு.
புத்தம்புது கதைகள்!, புலன்கூறும் பொய்கள்...!
முத்தமிழும் இத்திசையில்...!
Sunday, May 17, 2026
முடக்கிப்போட்ட முப்பது ஆண்டுகள்...!
இரங்கற்பா - கே ராஜன்
கோமாளியும் குலவிளக்கும் தீராக்காதலில் திளைக்குங்கால்...!
Saturday, May 16, 2026
உமிழ்நீர் சொரிந்தோடும் தமிழதிகாரம்...!
முந்தை நிலத்தினில் மூத்தவளாய் என்றென்றும்
விந்தையுற்றே வாழும் விழுமியமாய் — முந்துதமிழ்
ஆதி மறைபொருளாய் ஆழ்கடலின் கீழ்த்தோன்றி
சோதி எனவொளிரும் சூழ்ந்து.
உயிராய் உணர்வாய் உளத்தினில் நின்று
மெய்யாய் விளங்கும் மொழியே — நயமார்ந்த
ஓசை ஒலியமைப்பால் உள்ளத்தை ஈர்க்கின்ற
வாச மலர்த்தமிழே வாழ்த்து.
கரைகாணாத் தொல்காப்பியக் கட்டமைப்புத் தந்து
திரைகடலாய் நின்ற திருவே — அரணாக
மாண்புறு நன்னூல் மரபினைக் காத்துநிற்கும்
யாப்பு இலக்கணமே யறி.
முப்பால் உலகிற்கு நல்கிய மூலமே
செப்பரிய சீர்மிகு செம்மொழியே — செப்பமுடன்
நாலடி நானூறும் நல்லறத்தைப் போற்றுகின்ற
மேலையார் போற்றும் விளக்கு.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூற்று
உற்ற பதிற்றுப்பத் தோடே — நற்றமிழின்
ஓங்கு பரிபாடல் கலித்தொகை யோடுநல்
ஆங்ககப் பாட்டே யறி.
சிலம்பின் சிலம்பொலிச் சீர்மிகு காப்பியம்
நிலம்புகழும் மேகலையோடு — கலந்தே
இசைநாடகத் தொன்மையால் இன்பம் தருமே
திசைநாறும் தீந்தமிழே தேர்.
மலையின் உதித்து மடுத்தோடும் யாறாய்
அலைகடலில் பாயும் அழகாய்த் — தலைசிறந்த
சந்தப் பொழிலமைத்துச் சாகா வரம்நெற்றே
விந்தையாய் நின்றாய் விரைந்து.
ஓலைச் சுவடியிலிருந்து கணினிவரை
ஞாலப் பெருவெளியில் நல்வழியாய் — காலத்தை
வென்றே புதுமையாய் வீறுகொண்டு நிற்கின்ற
நின்றமிழே நின்கொடை நேர்.
யாதும் ஊரென்றே உலகிற்குப் பறைசாற்றி
யாவரும் கேளிரென்றே எண்ணியே — தீதின்றி
மாந்தநேயப் பண்பை வளர்க்கின்ற மாமொழியாய்
பூந்தமிழே நீயே பொலி.
எத்திசையும் புகழ்மணக்க வாழ்கின்ற எழில்தமிழே
நித்தமும் உன்பாதம் போற்றுகின்றேன் — வித்தகமாய்
என்னுயிராய் என்னுணர்வா யென்னாளும் காத்துநிற்கும்
நன்னெறியே உன்னை நயந்து!
கொல்லும் காதலேந்தும் கொடியிடை நடையாள்...!
காரிருள் போன்ற குழலழகி தன்வண்ணச்
சீரழகால் என்னெஞ்சைச் சிந்திக்கச் - செய்தாளே!
பேரன்பு கொண்ட பெருந்தகையாய் நானிருக்க
ஆரமுதை நெஞ்சே அணை.
அம்புலி இல்லா அமாவாசை நள்ளிரவில்
வம்பவிழ் கூந்தல் மறைத்ததென் - நெஞ்சத்தை!
கண்ணாளன் வாரானோ காரிருள் வேளையிலே
விண்ணாளும் காதலில் வீழ்ந்து.
பேராசை கொண்டேன் பெருங்குழலாள் தன்மார்பில்
ஆரா அமுதைத் தினம்அருகே - ஈராயிரம்
நாட்கள் பருகினும் நாட்டம் தணியாதே
கோடி யுகமும் குறைந்து.
நெஞ்சக் கமலத்தில் நேசமாய் வீற்றிருந்தும்
கொஞ்சும் மொழியாளோ ஊடினாள்! - வஞ்சியவள்
சின்னச் சிரிப்பொன்றில் சிந்தை குளிர்ந்திடுமே
என்னைவிட் டேகாதே ஈங்கு.
ஊடல் தணிந்துநாம் ஒன்றுசேர் நல்வேளை
கூடல் பெருங்களிப்பில் கொள்ளுமால் - ஆடவன்றன்
தோளோடு தோள்சேரத் தோன்றிடுமே பேரின்பம்
வாடாத காதலின் மாண்பு
மையல் பெருகி மனத்தில் எழும்நெருப்பு
வெய்ய சுடராய் விறகின்றி - மெய்யுருகக்
காமத் தழலாய் கனிந்தே எரிகிறதே
யாமத்து வேளையிலே ஈங்கு.
நெருங்கிநாம் நிற்கையிலே நெஞ்சத்து மூச்சுப்
பெருங்காற்றாய்ப் பட்டுப் பதைக்க - இருவருமே
மெய்ம்மறந்து நின்றோம் மிகுகாம வெம்மையிலே
நெய்ம்மலர்ந்த பூப்போல நாம்.
கார்வண்ணக் கூந்தல் கலைந்து புரண்டிடவே
சீரண்ணல் மார்பில் திளைத்தவளாய் - நேரங்கள்
போனதே அறியாமல் பூவொடு வண்டாக
ஆனதே நம்முடலின் அச்சு.
மோகத்தீ மூச்சுடன் முட்டி இணைந்துநாம்
ஏகமாய் நின்ற இடத்தினில் - சோகங்கள்
தீர்ந்துயிர்கள் ஒன்றாய்த் திளைத்துமகிழ் வுற்றதே
பேரின்ப மோட்சப் பெருக்கு.
அமாவாசை இருளும் அழகியவள் கூந்தல்
நமைச்சூழ்ந்து மோட்சம் நவில - எமதாகக்
காமமும் காதலும் கட்டவிழ்ந்து நின்றதே
பூமிப் பேராசைப் பொருள்!
Thursday, May 14, 2026
வாழ்வெனும் மறைபொருள்...!
தந்தையின் நினைவலைகள்...!
Wednesday, May 13, 2026
சுழ்ந்துகொண்ட காதலதில்...!
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில்...
நேரினில் உன்றன் முன்னின்று நெஞ்சின்
காதலை உரைத்தேன் அங்கே!
கார்நிறக் குழலி நீயோ வலைதனில்
காத்திரு என்றே சொன்னாய்!
சீர்மிகும் நாட்கள் ஓடச் சிந்தைதான்
வியப்பில் ஆழ்ந்து
நீர்மலி விழிமுன் நின்றே நீளுமோர்
வியப்புக் குறியாய்!