தலைவன் இழந்ததாலே திக்கற்று நின்றே
நிலைகுலைந்து போனதே கட்சி - பலவாய்
உடைந்தே நொறுங்கி உருவமிழந்து
அடைந்ததே அந்தோ அழிவு.
பதவிமேல் ஆசை படர்ந்ததாலே பாவம்
சிதறிப் போனதே சீர்மை - இதயம்
இலாதார் கையில் இயக்கம் இருந்திடவே
கல்லாய் உடைந்ததே இன்று.
ஒன்றாய் இருந்த உருவம் உடைந்ததாலே
நன்றாய் சிரிப்பார் நலிவுறவே - பொன்றாத
அன்பு மறைந்து அகந்தை பெருகிடவே
துண்டாய் விழுந்ததே தொண்டு.
நம்பிக்கை வைத்தே நலிந்தாரே தொண்டர்கள்
கும்பிட ஆளின்றிக் குலைந்தாரே - வம்புக்கு
ஆளாய்ப் பிரிந்தாரே அண்ணன் தம்பிகளாய்
பாழாய்ப் போனதே பார்.
கோட்டைப் படியேறக் கொண்ட கனவெல்லாம்
வேட்டையாய்ப் போனதே வீணாக - கூட்டத்தின்
சுயநலப் போக்கால் சிதைந்தே போனதே
நயமற்றார் கையில் நலிந்து.
வீட்டுச் சண்டையினால் வீதியில் நின்றாரே
நாட்டவர் எள்ளி நகையாட - கூட்டத்தில்
பிரிவினை கண்டே பகையவன் ஆடுவான்
சிரிப்பொலி கேட்பாயே இன்று.
ஆலமரம் போன்றே அகன்று விரிந்தாரே
காலம் கனிந்து கரையுதே - சீலம்
இழந்ததாலே வேர்அழுகி வீழ்ந்ததே
நிழலின்றித் தவிக்கும் நிலம்.
அன்னை இலாது அடைந்தாரே துன்பங்கள்
சும்மா பிரிந்து சிதைந்தாரே - முன்னவர்
தந்த இயக்கத்தைத் தாங்காமல் வீழ்த்திடும்
சிந்தனை கெட்டவர் செயல்.
பெயரை வைப்பதில் பேரார்வம் கொண்டார்
உயிரை இழந்து உலைந்தார் - செயலற்றுப்
பத்துத் துண்டாகப் பாரினில் சிதறவே
நித்தம் அலைவார் நிலைகெட்டு.
இனிமேல் இணைவாரா என்பதுவும் கேள்வி
தனித்தனிப் பாதையில் தாழ்ந்தார் - கனிவாகக்
காலமே சொல்லும் கசப்பான உண்மையினை
சீலமே வெல்லும் சிறந்து.
No comments:
Post a Comment