Tuesday, May 19, 2026

ஓவியத்திற்கு ஒப்பனையாய் அவளும்!, காவியத்திற்கு கற்பனையாய் நானும்...!

வண்ண முகம்மறைத்து வாடுகின்ற பாவையவள்
எண்ணமதில் ஏக்கம் ஒளிந்திருக்குக் - கண்ணாடியில்
தன்முகத்தைக் காணத் தவிப்பாள் தனிமையிலே
புன்முகமூ டிபூட்டி இன்று.

​மைதீட்டும் கண்ணிணை மாசற்ற புன்னகையும்
பொய்தீட்டி நிற்குமொரு பூவையவள் - நெஞ்சத்தில்
பெய்தீட்டும் கண்ணீரைப் பேதையவள் தான்மறைக்க
மைதீட்டி நின்றாள் மகிழ்ந்து.

​சாயத்தைப் பூசியே தன்வழியே தான்நடக்கும்
மாயப்பொற் பாவை மனத்தினுள் - தீயாய்
அழுகின்ற ஏகத்தை ஊரறியா வண்ணம்
ஒழுகுவாள் சாயத்தால் உற்று.

​கோலங்கள் நாளும் முகத்தில் வனைந்துகொள்ளும்
சீலமில்லா வையத்துச் செய்திதுவே - ஞாலத்தார்
மெச்சும் புறவடிவம் மேவியே ஏமாற்றும்
பொய்ச்சுவராய்ப் பாவை புனைந்து.

​வண்ணங்கள் யாவும் நள்ளிரவில் தான்அழித்து
திண்ணமாய் நிற்பாள் திகைத்துமே - கண்ணாடியில்
உண்மை முகமதனை உற்றுநோக்கிப் பாவையவள்
கண்ணீர் வடித்தாள் கசிந்து.

​புன்னகையைத் தேடிப் புதுவண்ணம் பூசுகின்றாள்
தின்னும் கவலையைத் தீர்க்கவே - மன்னுலகில்
ஊரார் புகழும் ஒளிர்கின்ற மேக்கப்பின்
சீரழிந்து நிற்குமே நெஞ்சு.

​கவசமாய் வண்ணக் கலவைகளை நாளும்
அவயவத்தில் பூசி அவளுலா - வந்துமே
நெஞ்சத்து மென்மையை நேரே மறைப்பதற்கே
அஞ்சாமல் நிற்கின்றாள் ஆங்கு.

​பொய்வடிவம் கொண்டு புறத்தார்க்குத் தோன்றிடினும்
மெய்வடிவம் தன்னை மிகமறைத்தாள் - கைவடிவக்
கண்ணாடியில் காண்பதுதான் உண்மை முகமென்று
எண்ணாமல் ஏமாறு வாள்.

​காயங்கள் நெஞ்சில் கனன்று கதறிடினும்
மாயப் பொடியால் மறைக்கின்றாள் - நேயமிலா
ஊரார் அறியா உடற்கலையே மேக்கப்பெனப்
பேரார வாரம் புரிவாள்.

​ஆசையற்று நெஞ்சில் அமைதியின்றி நாளுமே
பூசுகின்றாள் வண்ணப் பொடியதனை - வையகத்தார்
போலி முகத்தை ரசித்திடவே தன்னுயிரை
நாளும் வதைப்பாள் நலிந்து.

No comments:

Post a Comment