Monday, May 11, 2026

மக்களின் தேவையே மானுட ஆட்சி...!

பள்ளியரு கேயும் பகரருள் ஆலயங்கள்
தெள்ளுபே ருந்து நிலையத்தின் - உள்ளருகே
நின்ற மதுக்கடையை நீக்கவே கோல்பிடித்தார்
வென்றிடுவார் மக்கள் வியந்து.

கள்ளின் கொடுமை களைந்தே இளையவரைத்
துள்ளும் அறிவால் துலக்கிடவே - உள்ளத்தில்
ஈரம் சுமந்தே இதமான உத்தரவு
தாரணி போற்றத் தந்து.

கல்வி நிலயம் கனிவுறு கோயில்முன்
புல்லறிவால் நின்ற புலைக்கடையை - ஒல்லையே
மூடிடவே சொன்ன முதல்வாநீர் நீடுழி
வாடிடாது வையத்தில் வாழ்.

இல்லத்துத் தீபம் இருளாது காத்திடவே
நல்லதொரு மாற்றத்தை நாட்டினார் - அல்லல்
தரும்மதுவை வேரோடு தள்ளியே காத்தார்
பெருமையொடு மக்கள் குடி.

ஆன்றோர் சொல்லும் அறநெறி போற்றியே
சான்றோர் பயிலும் இடத்தினில் - தோன்றிடும்
தீய மதுக்கடையைத் தீய்த்தார் முதல்வர்தம்
தூய அரியணைச் சீர்.

போதை அரக்கன் புகலிடத்தைச் சாடியதால்
மேதினி போற்றும் மிடுக்கினோன் - தீதிலா
செந்நெறி காட்டிச் செழுந்தமிழர் வாழ்க்கையை
உன்னதமாய் மாற்றும் ஒளி.

கண்ணீர் துடைத்துக் குடும்பத்தைக் காத்திட்ட
மண்ணின் முதல்வா மணிவிளக்கே - நண்ணிய
தீய மதுக்கடையைத் தீர்த்த நுமதுகரத்தைப்
பாய்புகழ் போற்றும் பணிந்து.

கல்வி கற்கும் இடத்தின் அருகினில்
புல்லறிவுக் கடைகள் புகாதபடி - நல்லறிவால்
மூடிய முதல்வா நுமக்குமே நன்றியினைச்
சூடியே நிற்பார் சுடர்.

ஊறு விளைக்கும் மதுவை ஒழித்திடவே
ஏறுநடைப் போட்டு எழுந்தீரே - வீறுகொண்ட
மக்கள் மனத்தில் மகுடமாய் வீற்றிருந்து
மிக்க மகிழ்ச்சி தருவீர்.

கௌதமன் நீல்ராஜ் கனிவோடு பாராட்டி
மெய்வருடிப் பாடிடும் மெய்வெண்பா - எவ்வழியும்
தீய மதுக்கடையைத் தீர்த்த முதல்வருக்கு
தூய புகழைத் தரும்.

#மக்களின்_தேவையே_மானுட_ஆட்சி

No comments:

Post a Comment